அடர்ந்த பழங்களினூடே
அலகுகளின் வழி
ஒலிபரப்பிக்கொண்டிருந்தன
சங்கீதத்தை
கிளை நிறைந்து
படர்ந்திருந்த பறவைகள்
கோடி வீட்டு
மாமரத்தில்.
உதயாஸ்தமனங்களை
அறிவிக்கும்
சம்பளமில்லாப்பணியாளர்களுடன்
கழிந்தன
வீடு கொள்ளாமல்
நிரம்பி வழிந்த
விருந்தாளிகளின் பொழுதுகள்
ரசனையோடு சிலருக்கும்
சற்றே எரிச்சலோடு
பலருக்கும்.
கொத்துக்கொத்தாய்ப்
பூத்த
பறவைகளின் வாசத்தில்
கிறுகிறுத்து
நின்ற மாமரமும்
கொட்டிய செல்வத்தில்
புரண்டெழுந்த தனகோடியும்
ஒற்றைக்கவண்கல்லுக்கு
அத்தனையும் உதிர்த்து
நிற்க
வெறிச்சோடிய
முற்றத்தில் விழுந்து கிடக்கின்றன
தூவிகள் ஒட்டிய
ஒன்றிரண்டு
மாம்பிஞ்சுகள். டிஸ்கி: அமீரகத் தமிழ்மன்றத்தின் பதின்மூன்றாம் ஆண்டுவிழா மலரில் வெளியானது.
அதீதத்திலும் வெளியிட்டுச் சிறப்பித்த ஆசிரியர் குழுவிற்கு நன்றி.
3 comments:
மிக அழகான கவிதை சாந்தி. அமீரக ஆண்டுவிழா மலரில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள்!
பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல...
கருத்துரையிட்ட நட்புகளுக்கு மிக்க நன்றி..
Post a Comment