Pages

Monday, September 16, 2013

சொல்வதெளிதாம்..

அமைதியாய் நகர்ந்துகொண்டிருந்த வரிசைகளில்
எறும்பாய் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
முன்னும் பின்னுமாய் முட்டிமோதியும்
தவித்துத் தடுமாறியும்
நகர முயன்றுகொண்டிருந்தன.
கிடைத்த இடைவெளிகளில் புகுந்தவையோ
நங்கூரமிட்டுக்கொள்ள,
அடைபட்ட அவஸ்தையில்
அலறிக்கொண்டிருந்தன அத்தனையும்
தொண்டை கிழிய..
கடலாய்ப் பரந்திருந்த போக்குவரத்தை
வாய்க்காலாக்கிய பெருமையுடன்
மிட்டாய்க்காக அடம்பிடிக்கும் குழந்தையென
கால் பரப்பி நின்றிருந்தது
நாற்சந்திச்சாலை நடுவில் வாகனமொன்று
பசுந்தழைகளை உடுத்திக்கொண்டு..
“பத்து பேராய்ச் சேர்ந்தால் ஓரத்திற்கு நகர்த்தி விடலாமே,
மற்றவர்களுக்கு இடையூறில்லாதபடி..”
என்றபடி
எத்தனையாவது மனிதனாகவோ
கடந்து கொண்டிருந்தேன் நான்.

5 comments:

ராமலக்ஷ்மி said...

சொல்வதெளிதாம்.. உண்மைதான். சிந்திக்க வைக்கிற கவிதை. அருமை.

சசிகலா said...

எத்தனையாவது மனிதனாக நானும்.. உண்மை தாங்க.

Anonymous said...

வணக்கம்

கவிதையின் வரிகள் சிந்திக்க வைக்கிறது அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Nellai.S.S.Mani said...

Fine

கீதமஞ்சரி said...

முதல் முயற்சி ஏன் நம்முடையதாய் இருக்கக்கூடாது என்று நாம் எப்போதும் சிந்திப்பதே இல்லை. சொல்வதெளிதுதான். இதில் மற்றவர்களையும் குறைகூறிப்போவோம். அது இன்னும் கொடுமை. கடலாயப் பரந்திருந்த போக்குவரத்தில் நங்கூரம் பாய்ச்சிய வாகனங்கள், மிட்டாய்க்காய் அடம்பிடிக்கும் குழந்தையென போன்ற உவமைகளை ரசித்தேன். பாராட்டுகள் அமைதிச்சாரல்.