Pages

Sunday, November 23, 2025

நல்லாச்சி..


சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்
காற்றடைத்த பையுடன் பலநாட்கள்
கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளே
கடப்பாரை நீச்சலை மறந்து
கெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்தி
நீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்கு
நிலமென்பது நினைவிலேயே இல்லை

ஆறும் குளமும் யோசிக்கின்றன
அடுத்த ஊருக்குப் போய்விடலாமென
தவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ
‘கலங்கியது தானே தெளியும்’
அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று
‘வாய்ப்பில்லை’ என்கிறது வாய்க்கால்

ஊரிலுள்ள நீரிலெலாம் குடைந்தாடியவள்
கிணறுகளை ஏனோ சீண்டுவதில்லை
சாகசம் அங்குபோல் எங்குண்டு என்போரை
கிணறுகளின் பிரதாபம் பாடுவோரை
முற்றத்து மூலையில் நிறுத்துவாளவள்
பெருமழையில் விழுந்த தாத்தா
இரவெல்லாம் தவித்த கிணறு
தூர்ந்து போகாமல்
இன்றும் நினைவுகளில் அலையடிப்பதை
நல்லாச்சியும் அவளுமே அறிவர்

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, November 22, 2025

நல்லாச்சி..


கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பி
அதற்குக் குளிராது வேட்டி போர்த்தி
சுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சி
முத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்
சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை

அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்
சம்பாரம் பயணிக்கிறது அத்தோடு
முற்றத்து முருங்கைச்சாம்பார் உசத்தியாம்
கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்
சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்
நடவு வயல் வீரர்களை நோக்கி
குழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி

‘சோத்துவாசனைக்கு என்னமும் ஒட்டிக்கிட்டு வரும்’
இரும்புத்துண்டைக்காவலுக்குப் பணித்து 
பத்திரம் என்கிறாள் பேத்தியிடம்
‘மடத்துக்கிணத்தடியில்தான் அரற்றியபடியே அலைகிறாளாம்
சித்தி கொடுமையால் செத்த செம்பகம்
செத்தபின்னும் தீராப்பசி தொடருதையே
பாவப்பட்ட செம்மத்துக்கு’
புலம்பிய நல்லாச்சி கவனித்தாளில்லை
வரப்பிலும் மேட்டிலுமாய் அமர்ந்து
பசியாறும் நடவு ஆட்களில்
ஒருத்தி மட்டும்
செம்பகத்தின் சாயலாய்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Tuesday, November 4, 2025

நல்லாச்சி

திடலின் ஓரத்திலிருக்கும்
ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்
ஆவலும் பயமும் கொள்வாள் பேத்தி
கிளிகளைப்போன்ற அக்காக்களும்
அக்கக்கோவெனும் கிளிகளும்
இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்
ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள்

விண்ணுக்கும் மண்ணுக்கும் 
பாலமாயிருந்த விழுதுகளில் சில
பாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தன
எண்ணெய் தடவாத முடிக்கற்றையென
நுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சில
அக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்க
விழுது பற்றி ஆடிய பேத்தி
அதே வீச்சில்
பூமியை முத்தமிட்டுப் புரண்டு
புழுதியை விபூதியெனப் பூசியெழுந்தாள்
கசிந்த குங்குமச்சொட்டுகளை ஒற்றியெடுத்தாள்

வாரியணைத்த நல்லாச்சி
சூனியக்கிழவிதான் இவ்வடிவெடுத்திருப்பதாயும்
‘வடக்கற்றையெலாம் அவளின் சடைக்கற்றை
அவ தலமுடியில தொங்குனா வலிக்கும்லா
அதாம் தள்ளியுட்டுட்டா’
என்றும் பயமூட்டுகிறாள்
உளுத்த மரத்திற்கொரு கதை சொன்னவள்
உயிர்மரத்துக்கும் ஒன்று வைத்திருப்பாள்
தள்ளிவிடாத மரமொன்று
தேவதையின் கூந்தலாய்க் கிளைத்திருக்கலாம்
எங்கேனும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.