Pages

Wednesday, March 9, 2011

பொதுவான புள்ளியொன்றில்..

அலைகளையும் தலைகளையும்
எண்ணிக்கொண்டும்,
கடலுடன் சேர்ந்துறுமும்
வயிற்றுக்கு பதிலளிக்கவொட்டாமல்
தகிக்கும் மனதின் சூட்டை
கடலைக்கு கடத்தியபடியும்;
தன்பக்கம் திசைதிரும்பும் கால்களை எதிர்நோக்கியும்
காத்துக்கொண்டிருந்த பொழுதுகளிலெலாம்,
கண்கள் பூத்துப்போகத்தான் செய்கிறது
கடற்கரையோர கடலைவியாபாரிக்கு..
அவரவர் சட்டைப்பையைத்துழாவும் கைகள்
வெளிக்கொண்டு வருவதெலாம்
ஏதோவொரு காகிதமாகவும் கைக்குட்டையாகவும்
இருக்கும்போதெலாம்,
பள்ளிக்கட்டணமும், மருந்துச்செலவும்
காற்றிறைத்த மணலாய்
உறுத்திக்கரிக்க..
உள்ளூர சலித்துக்கொள்கிறார்
பிளாஸ்டிக் பணயுகத்தையும்
பாக்கெட் தின்பண்டங்களைப்பற்றியும்..
தன்னிச்சையாக அள்ளியிறைத்தாலும்
சற்றுத்தாராளமாகவே விழுகின்றன கடலைமணிகள்,
ஒண்டிக்கொண்ட சிறு அவகாசத்தில்
நட்பாகிப்போன புறாவொன்றுக்கு..
நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்..
வாடிக்கையாளருக்காகவும் சிந்தும் கடலைக்காகவும்.....
காத்திருத்தலென்னும்
இருவரையும் இணைக்கும்
பொதுவான புள்ளியொன்றில்.

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி..

18 comments:

எல் கே said...

கவிதையின் கரு அருமை சாரல்

Yaathoramani.blogspot.com said...

மிக அருமை
படைப்பும் பதிவும்
எதைப்பார்த்து எது என
சொல்ல முடியாதபடி
ஒரு புள்ளியில்
இணைந்து போனது
பிரமிப்பூட்டுகிறது
சூப்பர் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சுந்தரா said...

//காத்திருத்தலென்னும்
இருவரையும் இணைக்கும்
பொதுவான புள்ளியொன்றில்.//

அருமையான கவிதை சாரல்.

கடலையென்றால்கூட கவர்ச்சியான பாக்கிங்கில் புகழ்பெற்ற ப்ராண்ட் நேமுடன் வருகிறதா என்றுதானே பார்க்கிறோம்.

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு மக்கா...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஒரு புள்ளியில் இணைத்த கவிதை அருமை..

வாழ்த்துக்கள் :-))
தொடர்ந்து கலக்குங்க...!!

ஹேமா said...

புள்ளிகள் ஒரேமாதிரி அமைந்தால் மட்டுமே காத்திருப்புக்கள் நிறைவாகும் !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

கவிதை எழுதுனப்புறம் பொருத்தமான படத்துக்காக கூகிளை தேடுனப்பதான், அட!! நான் எடுத்த படமே இதுக்கு பொருத்தமா இருக்குமேன்னு தோணிச்சு.. சேர்த்துட்டேன்:-))

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

இப்ப எந்த குட்டீசும் பாக்கெட் கடலையைக்கூட தொடறதில்லை.. இறக்குமதி செய்யப்பட்ட மற்ற தின்பண்டப்பொட்டலங்கள்தான் :-(

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

வாசித்தமைக்கு நன்றி சகோ..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

அப்படியும் சொல்லலாமில்ல :-))))

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க..

மாலதி said...

ஒரு புள்ளியில் இணைத்த கவிதை அருமை..

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியாக தாங்கள் பதிவிட்டு
ஒருமாதம் ஆகிறது
வேளைப்பளு காரணமாய் இருக்கும் என யூகிக்கிறேன்
ஆவலுடன் தங்கள் பதிவை எதிர்பார்த்து...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கமலேஷ்,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாலதி,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

அக்கறையுடன் விசாரிச்சதுக்கு ரொம்ப நன்றி.

வேலைப்பளுவுடன் ஃப்ளிக்கரில் இறங்கியிருப்பதும் ஒரு காரணம் :-)))

ஃப்ளிக்கர் போட்டோக்களை அமைதிச்சாரல் தளத்தில் போய்ப்பார்க்கலாம் :-)