Pages

Tuesday, March 18, 2014

மௌனமே சொல்லாய்..

கனத்த அமைதியைப் பூசிக்கொண்டிருக்கும்
அந்த அறையினுள்
மௌனம் நிரம்பிக்கிடந்தது
பேச்சற்றுப்போன இருவரைச்சூழ்ந்து கொண்டு

தளும்பிய மௌனத்திலிருந்து
ஒவ்வொரு சொல்லாக வழிந்து
இன்னும் அவை
மௌனத்தைப்பூசிக்கொண்டிருப்பதை அறியாமல்
அறையை நிரப்பத்தொடங்கிய வேகத்திலேயே
மாறிவிட்டிருந்தன
வைராக்கியமாகவும் வாக்குறுதிகளாகவும்
குற்றச்சாட்டுகளாகவும் சமாதானங்களாகவும்

‘யார் ஆரம்பித்து வைத்தது?’ என்று
அவர்களாகவே கேட்டுக்கொண்டு
‘நானில்லை..’ என்று அவர்களாகவே மறுத்துக்கொண்டார்கள்
வழக்கம்போல் எதிர்தரப்புதானென்று
தீர்ப்பும் எழுதிக்கொண்டார்கள்

சிதறிக்கிடந்த சொற்களை அள்ளி வீசிவிட்டு
“அதிகப்பிரசங்கி..” என்றொரு முணுமுணுப்புடன்
விரல்கள் கோர்த்துக்கொண்டு
மனங்கள் மட்டும்
பேரிரைச்சலோடு பேசிக்கொண்டிருக்கையில்
மௌனம் கனத்துத் ததும்பும் இரவிலிருந்து தெறிக்கிறது
ஒற்றைப்பறவையின் அலறல்.

Thanks to  atheetham.com


5 comments:

செய்தாலி said...

ஒற்றைப்பறவையின் அலறல்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

கோமதி அரசு said...

கவிதை நன்றாக இருக்கிறது சாந்தி.

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை, சாந்தி.

Thulasidharan V Thillaiakathu said...

வரிகளில் அசத்துகின்றீர்கள் சகோதரி!