Pages

Sunday, June 22, 2014

அது.. இது.. எது..

சாலையோரக்கடையொன்றில்
கூனிக்குறுகி அமர்ந்திருந்தவை
ஒரு நாள் திறந்து விடப்பட்டன கூண்டிலிருந்து

அச்சத்தோடும்
சற்றே ஜாக்கிரதை உணர்வோடும்
தப்பித்தலை மறந்திருக்குமென்ற நம்பிக்கையில்
திறந்து விடப்பட்டிருந்த பிராய்லர் கோழிகள்
புகைச்சூழலில் ஒரு கணம்
தள்ளாடியபடி தங்கள் காலடிகளைப் பதித்தபின்
வலித்த விரல்கள் உதறி
இறக்கைகளில் மீதமிருந்த சோம்பல் முறித்தபின்
புனர்ஜென்ம வாசனையால் மண் கிளறி
சுதந்திரமும் கொண்டாடின

வெட்டு மேடையிலும் சுழலும் சக்கரங்களிலும்
காத்திருந்த
இருமுனை மரணத்தை வெறித்தபின்
சாவகாசமாய் மேய்ந்தபடி கொத்த ஆரம்பித்தன
அவைகளின் கடைசி உணவாயிருக்கக்கூடிய ஒன்றை

நேற்றும் இன்றும் அதுவாக இருந்த இது
நாளையே ‘எது’வாகக் கூடுமென்பதை அறியாமல்.

4 comments:

வல்லிசிம்ஹன் said...

கொடுமை. தெரிந்த விஷயம் .இதை நீங்கள் கவிதயாக்கும் போது மரணத்தின் கூர்மை இந்த சிறு ஜீவன்களுக்குத் தெரியாமலே போகட்டுமே என்றிருக்கிறது. மிக அருமையானவரிகள் ஷாந்தி.

ராமலக்ஷ்மி said...

அருமை சாந்தி.

Yaathoramani.blogspot.com said...

ஆழமான பொருளுடைய
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

அருமை அருமை !!!! அசாத்தியமான வரிகள் சகோதரி! தொடர்கின்றோம் சகோதரி தங்களை!