சுட்ட படம்.
ஆங்கோர் சாலைக்கம்பத்தில்பூத்திருந்த செம்மலரின்
தகிக்கும் காட்டினையொத்த நிறம் ஒன்றே
அத்தனை வாகனங்களையும்
ஸ்தம்பிக்க வைக்கப்போதுமானதாயிருந்தது
சற்றே வெளிறி அம்மலர்
மஞ்சள் பூசிக்கொண்டபோது
அந்நிறமொத்த செண்பகச்சரங்களை
வாகன வீதியில் விற்றுக்கொண்டிருந்த சிறுவனின் குரலும்
பதட்டம் அணிந்திருந்தது
மஞ்சள் பூசிய செம்மலர் பசிந்து உதிர்ந்தபோது
விரைந்தவர்களின் பார்வையில்
மனமும் பூச்சரங்களும் ஒருசேரக் கனக்க
சுமந்து நின்றிருந்த அவன் படவேயில்லை
மீதமிருந்ததில் ஒரு சரம்
தங்கையின் சாயலிலிருந்த
ஓர் ஏழைச்சிறுமியின் கூந்தலமர்ந்து
செல்லிடமெங்கும் நறுமணம் பூசியபடியிருந்தது
வசிப்பிடம் திரும்பிக்கொண்டிருந்த அவனுக்கு
அன்றைய நாளினை நிறைவடையச்செய்ய
அதுவே போதுமானதாயிருந்திருக்கலாம்.
வால்: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.
2 comments:
நுண்ணிய உணர்வுகளை, மெல்லிய சொற்களில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் கவிஞருக்கு என் பாராட்டுகள். கவிதையிலும் பத்தி பிரிப்பது வாசகர்க்கு உதவுமல்லவா? யோசிக்க வேண்டுகிறேன். நன்றி
அருமையான கவிதை!
Post a Comment