Pages

Friday, August 29, 2025

நல்லாச்சி

                               
தங்கம், ரப்பர், சங்கு என
விதவிதமாய் அணிந்த வளையல்கள்
அலுத்துப்போய் விட்டனவாம் பேத்திக்கு
புதிதாய் ஆசை துளிர்விட்டிருக்கிறது
கண்ணாடி வளையல்கள் மீது

கலகலவெனச்சிரிக்கும் அவற்றின் மகிழ்ச்சி
அணிந்தோரையும் அடுத்தோரையும்
தொற்றிக்கொள்வதாய்ச்சொல்லும்
பேத்தியின் குதூகலம்
நல்லாச்சியையும் தொற்றிக்கொள்கிறது
ஆடைக்கேற்ற வண்ணங்களில்
பேத்தியின் பூங்கரங்களில்
அழகழகாய் அடுக்கி அழகு பார்க்கிறாள்
‘எந்தங்கத்துக்கு எல்லாக்கலரும் எடுப்பாத்தான் இருக்கும்’
வளையல்களைத்தடவி முத்திக்கொள்கிறாள்
அவ்வீட்டினுள் நிறைந்தேயிருக்கிறது வளையோசை
மூடுபனியென

கள்ளன் போலீஸ் விளையாட்டின்போது
போலீசாயிருக்கும் பேத்தியின் கைகளில்
திருடன் எப்பொழுதும் அகப்படுவதேயில்லை
போலீஸ் வரும் தகவல்
க்ளிங்கென ஒரு தந்தியைப்போல் 
முன்னரே சென்று சேர்ந்து விடுகிறது அவனுக்கு
உளவாளி யாரென துப்புக்கொடுப்போர்க்கு
ஒரு நெல்லிக்காய் சன்மானமாம்
தனக்குத்தெரியுமென எவ்விக்குதிக்கின்றன வளையல்கள்
அதன் மொழி புரியாத பேத்தி
இன்னும் ஆக்ரோஷத்துடன் அலைமோதுகின்றாள்
புரிந்துகொண்ட நல்லாச்சியோ
வாளாவிருக்கின்றாள்
என்ன செய்ய
நெல்லிக்காய் அளவுக்கே
கண்ணாடி வளையல்களையும் பிடித்திருக்கிறதே அவளுக்கும்.

டிஸ்கி: வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி

Sunday, August 24, 2025

நல்லாச்சி

                                         
தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்
கரேலென்றிருக்கும் வானத்தில்
ஆட்டுக்குட்டிகளாய் 
மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம்

தலைப்பிரசவம்போல் 
எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்
மழையின் வீச்சிலிருந்து
நெல்லைக்காப்பாற்றும் முகமாய்
சாக்குப்பையில்
மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சி
உழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்தி
கேட்கிறாள்
மழை எப்போது பெய்யுமென

‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்
மகேசன் கணக்குல்லா’
பதிலாகவும் புலம்பலாகவும்
ஒரே நேரத்தில் சொன்னபடி
மெலிதான இடிச்சத்தத்தைச் செவிமடுக்கும் ஆச்சியை
தாக்குகிறது அடுத்த கேள்விக்கணை
அதென்ன கிடுகிடுச்சத்தமென
இறைவனும் இறைவியும் தாயம் விளையாடுகின்றனர்
தாயக்கட்டைகளை உருட்டும் ஒலிதான் அதுவென
பகர்கிறாள் ஆச்சி பேத்தியிடம்

கடவுளர் சற்று வேகமாக உருட்டிவிட்டனர் போலும்
அண்டம் கிடுகிடுக்கிறது பேரிடியால்
அர்ச்சுனா.. அர்ச்சுனா என விளிக்கின்றாள் நல்லாச்சி
வாய்திறந்து அலறினால்
வாய்ப்பூட்டு நேராதென
அறிவியலை விளக்கியவள்
அர்ச்சுனனை அனைவரும் அஞ்சுவர் என
ஆன்மீகத்தையும் தெளிக்கிறாள்
கேள்வியின் நாயகியைப் பேத்தியாய் அடைந்தவள்

அடுத்து உருண்டு வந்த இடியை
அர்ச்சுனர் பேர் சொல்லி அச்சுறுத்தும் 
குரல்கள் நடுவே
தனித்து மிரட்டுகிறது
‘ஆச்சி.. ஆச்சி’ என்றொரு குரல்
நல்லாச்சி வந்துன்னை 
வெற்றிலையில் பாக்காய் மெல்லுமுன் ஓடிவிடென
மேலும் மிரட்டுகிறாள் பேத்தி
அந்த இடி
இங்கே எங்கேயோதான் 
நல்லாச்சிக்கும் பேத்திக்கும் பயந்துகொண்டு
தலைமறைவாய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறதாம்
என்றாவது அது வாலாட்டினால்
நீங்கள்தான் நல்லாச்சியெனச்சொல்லுங்கள் 
போதும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Thursday, August 14, 2025

கைவிடப்பட்ட கூடு (காற்றுவெளி)

உடைந்த சுள்ளிகளும் பஞ்சுப்பிசிறுகளும்
பாதி பின்னிவிடப்பட்டிருக்கும் நார் இழைகளுமாய்
முற்றுப்பெறாமல் நிற்கும் அக்கூட்டில்
முராரி ராகமிசைக்கின்றன
அங்கே பொரிக்கவிருந்த பறவைக்குஞ்சுகள்
யாருமற்ற கூட்டின் சுவர்களில்
எதிரொலித்து அடங்குகிறது அந்த இசை

ஒரு கனவு ஆரம்பிக்கும் முன்னரே
முடங்கி 
கைவிடப்பட்டதன் கதை
கேள்விக்குறியாய் நிற்கிறது அதன்முன்
கனவுகள் எல்லாமே
கண்டு கைவிடப்படுவதற்கு மட்டுந்தானா?
முழுமை பெறாத கனவுகளின் நினைவுச்சின்னமாய்
இனியெப்போதும் அந்தக்கூடு
அங்கேயே காத்திருக்கும்
என்றாவது ஓர்நாள் அப்பறவைகள்
அக்கூட்டின் நலம் விசாரிக்க
அங்கே வரக்கூடும்
கைவிடப்பட்ட இன்னொரு பறவைக்கு
இந்தக்கூடு அடைக்கலமாகவும் கூடும்

முழுமையடையா பறவைக்கூடு
வெற்று மௌனத்துடன் உறைந்து
ஒரு துயரச்சின்னமாய் 
முடிவிலா சோகத்துடன் காத்திருக்கிறது
கிளைகள் காற்றில் மெல்ல அசைகின்றன
எங்கிருந்தோ ஒரு குயிலின் கூவல் கேட்கிறது
முடிக்கப்படாத இந்தக்கூட்டின்
கதை அறியாது
அதைக்கடந்து செல்கிறார்கள்
அது கைவிடப்பட்டதன் துயரமும் அறியாமல்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட காற்று வெளி மின்னிதழுக்கு நன்றி.

Wednesday, August 6, 2025

நல்லாச்சி

P:C: panbudan
தட்டட்டியில் பெய்யும் மழை நீரையெல்லாம்
தேக்கி வைக்கத்துடிக்கிறாள் பேத்தி
குளமாக்கி அணையாக்கி ஆறாக்கி
இறுதியில் அதை
கடலாகவும் ஆக்கி விட வேண்டுமாம்

சுறாமீன்களைத் தோணியாகவும்
திமிங்கிலங்களைக் கப்பலாகவும் கொண்டு
ஈரேழுலகமும் சுற்றி வர வேண்டும்
மனிதர் புழங்காத நாடுகளும் தீவுகளும் 
ஏராளம் கண்டுபிடிக்க வேண்டும்
அவற்றில்
நல்லாச்சியின் கொடி உயரப்பறக்க வேண்டும்
வானளாவிப்பறக்கும் கொடியைப் பற்றிக்கொண்டு
விண்வெளிக்கும் செல்ல வேண்டும்
அங்கே
நிலவில் வடை சுடும் பெரிய ஆச்சி
பிடித்து வைத்திருக்கும் விண்மீன்களைக் கொணர்ந்து
தோட்டத்துக்கிணற்றில் விட வேண்டும்
மின்னி மின்னி அவை நீந்தும்போது
மத்தாப்பு கூட தோற்றுவிடும்

கதை வளர்த்துக்கொண்டே போகும் பேத்திக்கு
முளைக்கிறதொரு சந்தேகம் திடீரென
விண்மீனும் நட்சத்திர மீனும் ஒன்றா
பிற உயிர்களின் எலும்பெல்லாம்
அவ்வாறே வழக்கிலிருக்கும்போது
மீன்களின் எலும்பை மட்டும்
ஏன் முள்ளெனப் பகர்கிறோம்
இத்தனை விண்மீன்கள் உள்ளதெனில்
வானில் இருப்பது எத்தனையாவது கடல்
கேள்விகளால் துளைக்கிறாள் 

வழக்கம்போல் விழிக்கும் நல்லாச்சி
வழக்கம்போல் சமாளிக்கிறாள் 
‘எல… தண்ணியெல்லாம் வெளிய போவுது
தூம்பாவ மொதல்ல அடை
குட்டையளவேனும் நீர் தேங்கினால்தானே
அது
கடலை குட்டியாய்ப்போடும்’
நல்லாச்சியின் சொல்லையேற்ற பேத்தி
தட்டட்டியின் மடையை அடைக்கிறாள்
வானில் பெருகத்தொடங்குகிறது
ஒரு
தொங்கும் கடல்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.