Pages

Tuesday, October 28, 2025

நல்லாச்சி..


பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்கு
சூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்கு
தென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்து
கருநாகம் போல் பின்னலிடும் வயது வரை
விதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்
சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்
தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்
குழந்தை மீனாட்சியாய் வரித்து
சுற்றிப்போட்டும் கொள்கிறாள்  

பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா என
தாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறது 
அந்தப் பூப்பிசாசிற்காக
எனினும்
தங்கத்தட்டாய் மலர்ந்திருக்கும் சூரியகாந்தி மேல்
ஆயிரம் கண் வைத்திருக்கிறாள் பேத்தி
தராமல்
சிட்டாய்ப்பறக்கும் மாமனை
வீடு காடு எங்கிலும் துரத்திக்கொண்டு ஓடுகிறாள்
நாவுலர்ந்து மூச்சு வாங்க
தட்டட்டியில் ஒளிகிறான் மாமன்
கூந்தல் பறக்க நிற்கிறாள் பேத்தி
ஓர் இசக்கியென

“அதை வித்துக்கு விட்டிருக்கு மக்களே
ஒரு பூவிலிருந்து ஓராயிரம் செடிகள்
பல லட்சம் சூரியப்பூக்கள்
காடெங்கும் மலையெங்கும் சூரியனாப்பூக்கும்
கைகொள்ளாமல் அள்ளிக்கொள்வாய் நீ”
சமாதானப்படுத்திய நல்லாச்சியின் வாக்கால்
சன்னதம் நீங்கி அமைதியடையும் பேத்தியின்
கண்முன் விரிகிறது
அடிமுடி காணவொட்டா ஒரு சூரியக்காடு.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

பானைக்குள் ஒரு பூனை.

தோழி செல்வியின் பூனை
இருளின் ஆழத்தில் தனிமையில்
சிறு பானைக்குள் முடங்கியமர்ந்து 
பகற்கனவில் ஆழ்ந்திருந்தது சிறு பூனை

சோம்பல் முறித்து நெளிந்தெழுந்த அது
வெளியேற இயலாமல் திகைத்தது
தவித்து வழிதேடிய பூனையின்
சின்ன மூளைக்குள் பிரளயமே நடந்தது
அதன் ஒவ்வொரு அசைவையும் 
தடைசெய்து சிறைப்படுத்தியது
அந்த சின்னஞ்சிறு பானை

கால் வீசி நடந்த கம்பீரம்
பழங்கனவாய் மின்ன
ஏக்கத்தின் மொழி கண்ணீராய் வழிய
சிக்கிக்கொண்ட ஆன்மா போராடுகிறது
பார்ப்பவர்களுக்கோ
அதுவுமொரு விளையாட்டாய்த்தெரிகிறது 
உலகமே ஒரு பெரும் பானை
பூனை என்பது
வாழ்வின் பிரதிபலிப்பும்தான்.

Monday, October 6, 2025

நல்லாச்சி


ஐந்தாறு நாட்களாய்
அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது வீடு
பருப்புப்பொடியும் ஊறுகாய்களும் இன்னபிறவும்
பாட்டிலில் அடைபட்டுக்கொண்டிருக்கின்றன
ஆரவாரம் கண்டு புருவமுயர்த்துகிறாள் பேத்தி
‘அண்ணன் வெளிநாட்டுக்குப்போறாம்லா’ 
குறிப்பறிந்து கூறுகிறாள் நல்லாச்சி

பத்தில் ஒரு பங்கைச் சேமித்து வை
அன்றாடம் கணக்கெழுது
நிர்வாகப்பாடத்தை மூளையில் திணிக்கின்றனர்
அப்பாவும் அம்மாவும்
வம்புவழக்கில் போய் விழாதே
அறிவுரையுடன்
தலைவலி வாசனாதி திரவியங்களுக்கு
துண்டு போட்டு வைத்தாயிற்று அக்கம்பக்கத்தினர்
தாத்தா கிணற்றடியில்
துணி வெளுக்கக் கற்பிக்கிறார்
அடுப்படியிலோ நல்லாச்சியிடம் நளபாகப்பாடம்;
காணும் செல்லாச்சி வம்பு வளர்க்கிறாள்
புருஷன்வீடு போகும் பெண்ணுக்கல்லவா
இத்தனை பாடமும் தேவை
ஆணுக்கெதற்கு இக்கடமை என்கிறாள்

வாடிய பேத்தியின் சார்பாய்
பதிலளிக்கிறாள் நல்லாச்சி
‘அடிப்படைத்தேவைகளுக்குப் பேதமேது
பாலினம் பார்த்தா பசி துளிர்க்கிறது
கடமையின் பொருட்டன்றி
வாழ்தலின் பொருட்டேனும் கற்றல் வேண்டும்
கற்றவரெல்லாம் கடந்து விட்டனர்
கொடிகட்டிக் கோலோச்சுகின்றனர்
கற்காலம் விட்டு நீ இக்காலம் வா’ என்கிறாள்
நயந்துரைக்கிறாள் நல்லாச்சி அனைவருக்குமாய்
உயிர்வரை இனிக்கிறது பேத்திக்கு.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி

நல்லாச்சி


வயலில் நடக்கும் அறுவடையை
மேற்பார்வையிடவென
தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும்
கேள்விகளும் பதில்களுமாய்
வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும்
அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது
சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு

அடிவயிற்றிலிருந்து ஓங்காரமிட்டுக்கொண்டிருந்த
அந்த இயந்திரம்
பயிரைத்தின்று விட்டு
நெல்மணிகளையும் வைக்கோலையும்
தனித்தனியாய்த்துப்பியது பேராச்சரியம் அவளுக்கு
‘மாடு, யானைகளைக்கட்டிப் போரடிப்பார்களாமே
போரடித்தலென்றால் என்ன”
ஆதியோடந்தமாய் அவளுக்கு விளக்கிய நல்லாச்சி
மேலுமொரு தகவலையும் பரிமாறுகிறாள்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் சொல்
இதிலிருந்துதான் பிறந்ததென
‘சண்டு விடுதல்ன்னு கிராமத்தில் சொல்லுவோம்’
தனக்குள் முணுமுணுத்துக்கொள்கிறாள்
அக்கால நினைவுகளில் அமிழ்ந்தபடி

காற்றில்லா காலங்களில் முறங்களும்
நாகரீகம் பெருத்தபின் மின்விசிறிகளுமாய்
நான்கு பேர்களின் வேலையை ஒருவர் செய்வதென
மனித உழைப்பைப் படிப்படியாக 
இயந்திரம் விழுங்கியதை
பேத்திக்குச் சொல்லிப் பெருமூச்செறிகிறாள்
தற்போது இவ்வியந்திரம்
எத்தனை வாழ்வாதாரங்களைக் 
காவு கொண்டிருக்கிறதோ வினவுகிறாள் பேத்தி
நாற்பதோ நானூறோ
விவசாயியின் சத்துக்குட்பட்டது அக்கணக்கு
எடக்குப்பேச்சும் தெம்மாங்குமாய்
மணத்துக்கிடந்த களத்து மேட்டில்
ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது இயந்திரம்
நெல்மணிகளைத் தின்னவரும் குருவிகளை விரட்டியபடி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.