வெறிச்சோடிய முற்றத்தில்
தானியம் கொத்தும் புறாக்களையும்
கசங்கிய வாழையிலைகளையும் பூச்சரங்களையும்
மேயும் மாடுகளையும்
வெறுமையுடன் வேடிக்கை பார்த்தவாறு
அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி
திருவிழா முடிந்த திருப்தியுடன்
கலைந்து கிடக்கிறது கோவில்
காட்டுக்குள்ளிருக்கும் குலதெய்வக்கோவிலை
சுற்றிச்சுற்றி வந்து
ரசிக்கிறாள் பேத்தி
மலைகள் சூழ்ந்த அவ்வனாந்திரக்கோவில்
திருவிழாவிற்குப்பின்
தனிமையைப் போர்த்திக்கொள்ளும்போது
தெய்வம் என்ன செய்யும்
அதற்குப் பாதுகாப்பிருக்குமா
விலங்குகள் அச்சுறுத்துமாவென
ஆயிரம் கேள்விகள் குடைகின்றன அவளை
தனிமையை அஞ்சிக்கொண்டிருந்த தெய்வம்
பதிலை எதிர்பார்த்துக் கூர்கிறது
பேச்சுத்துணைக்கும் கதியற்ற கானகத்தில்
கருவறை இருளைக் கிழித்துக்கொண்டு
பீடத்திலிருந்து இறங்கி வந்த அது
கானகத்துத் தனிமையை
விலங்குகளின் நெற்றியில் தீற்றிவிட்டு
பேத்தியின் கொலுசொலியை ஏந்தியபடி
ஊருக்குள் நடக்கத் தொடங்குகிறது
எங்கோ ஒரு எரிநட்சத்திரம்
பொரிந்து வீழ்கிறது
தனிமையை எதிரொலித்தபடி.
டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

No comments:
Post a Comment