Pages

Wednesday, September 5, 2012

துளியில் மலர்ந்த பூக்கள்..

படம் அளித்த இணைய வள்ளலுக்கு நன்றி


மலர்தலும் உதிர்தலும்
இயல்பெனினும்
காலக்கணக்கில் கட்டுண்டு நிகழாமல்
சிறு தூறலிலும்
உடன் மலர்ந்து விடுகின்றன
சாலைச்சோலையில்
பூக்கள்... குடைகளாய்;
தேனருந்தும் வண்டுகள்தாம்
மூக்குடைந்து திரும்புகின்றன
முயற்சியில் தோற்று.

ஊன்றுகோலாகவும் ஒத்தாசை செய்யும்
முதுகு வளைந்த
முதிய தலைமுறையினர் முன்
வெட்கிப் பதுங்கிய
இளைய தலைமுறைகள்
அடைக்கலம் தேடுகின்றன
கைப்பைகளுக்குள்,
மூன்று சாண் உடம்பை
ஒரு சாணாய்க் குறுக்கியபடி.

ஆரவாரத்துடன் நாட்டு வளம் காண
பாய்ந்து வந்த நொடியில்
சரேலென்று பறந்த
கறுப்புக்கொடிகள் கண்டு
திரும்பி விட எத்தனித்தாலும்
குடை மடக்கி உடல் நனைத்து
நா நீட்டி மழை ருசித்த
ஈர மனதை மேலும் குளிர்விக்கத்
திரும்பி வருகிறான்
வருண தேவன்.

டிஸ்கி : வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.

Wednesday, August 15, 2012

கனவு சாம்ராஜ்யத்தில்..


இணையத்தில் சுட்ட படம்
அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர்
எனது சாம்ராஜ்யத்தில்.

பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால்
கழுவிக்கவிழ்த்து விட்ட
மணிமேகலையின் அட்சயபாத்திரம்
சிலந்திகளின் உறைவிடமாகிவிட,
சுமையற்ற கல்வியாலயங்களில்
குடி புகுந்த சரஸ்வதி
நிரந்தரக்கொலுவீற்றிருந்தாள்
சிறார்களின் புன்னகைகளில்..

பேராசையுடனலைந்த
வரதட்சணைப்பேயின் தலை
சுக்கு நூறாகச்சிதறி விட
பெண் சிசுக்களுக்கென்று மட்டும்
மடி சுரந்த
எருக்கிலமும் கள்ளியும்
அடிமாடுகளாய்ப்போய்க்கொண்டிருந்தன
அடுப்படியில் பலியிடப்படுவதற்கென்று..

கேட்டுப்பெறாமல்
தானாய்க்கிடைத்த சுதந்திரக்காற்றில்
கொல்லைப்புற மருதாணியும்
முற்றத்துத் துளசியும் வாசம் பரப்பி வர
அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்
எனது கனவு சாம்ராஜ்யத்தில்..

டிஸ்கி: வல்லமையின் சுதந்திர தினச் சிறப்பிதழில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்

Sunday, July 15, 2012

நட்ட ஈடு

படம் தந்த இணையத்திற்கு நன்றி
பொருள் வழிப்பிரிந்ததினால்
சேர்ந்து களிக்காமல்
மகன் கணக்கில்
இளமையில் எழுதிய நட்டத்திற்கெல்லாம்
ஈடு செய்து கொண்டிருக்கிறார்
முதுமையில்,
பேரனுடன் விளையாடும் தாத்தா.
மேலும் கடனாய்
முத்தங்களை வாங்கியபடி.
லேசான மனங்களைப்போல்
உயரே பறக்கிறது காற்றாடி
வாலை வீசி... வீசி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

Friday, July 6, 2012

மந்திரச்சொல்..


இணையத்தில் சுட்ட படம்..
தாள முடியாமற் போகிறது
உனதன்பைச்
சில சமயங்களில்..
மெல்லிய நீரோடையாய்ச் சலசலக்குமது
காட்டாறாய்ப் பொங்கிப் பிரவகிக்கும்போது
மூச்சுத்திணறி நிற்கும் பொழுதுகளில்
அருவியாய்ப்பொழிந்து
உருட்டிச்செல்கிறாய் என்னை..
பூனைப்பாதம் வைத்துப் பின் வந்து
மெல்லக் கண்பொத்தி
கன்னம் கடித்த தருணங்களில்
சீறிச்சினந்ததைப் பொருட்படுத்தாமல்
சில்லறையாய்ச் சிதற விடும் சிரிப்பால்
தண்ணீர் பட்ட பொங்கிய பாலாய்
அமிழ்த்தி விடுகிறாய் என் மனதை..
சுமக்க இயலாமல்
எங்கேனும் எவரிடமேனும்
இறக்கி வைக்க முயலுந்தோறும்
பேரன்பாய்ப் பல்கிப்பெருகுவதும்
ஓராயிரம் வலிகளையும்,
சுமைகள் தந்த காயங்களையும்
துடைத்துப்போடும் மாமருந்தாய்
இருப்பதுவும்
அன்பெனும் மந்திரச்சொல்லுக்கே சாத்தியமென்று
என்றுமே நிரூபிக்கிறாய்
என் தேவதையே..
என் வானிற் பூக்கச்செய்த வானவிற்களின் மூலம்..

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..

Friday, June 29, 2012

இன்னும் தீருதிலையே..


இணையத்தில் சுட்ட கிளி..
தலையைத்தலையை
ஆட்டிக்கொண்டு உட்காந்திருக்கிறது
அந்தப்பறவை
தன்முன் இறைந்து கிடக்கும்
கேள்விகளைக்கொறித்தபடி..

எதிர்காலக்கேள்விகளை இறைப்பவர்க்கு
இறந்தகாலக்கேள்விகளைச் சாமர்த்தியமாய்ப் பதிலளித்து
கேள்விக்குறிகள் நிரம்பிய
தன் நிகழ்காலச்சிறையில்
முடங்கிக்கொள்ளும் அப்பறவை
இரண்டு நிமிடச் சுதந்திரக்காற்றில்
சிறகு விரித்துப் பறக்கிறது விர்ர்ர்ரென,

புதிதாய் முளைத்திருந்த
இறகுகளிலிருந்து சிதறி மிதக்கின்றன
கேள்விகள்
காற்றுவெளியெங்கும் எண்ணிலடங்காதவையாய்..
இறுக மூடியிருக்கும் என் கைகளில்
இன்னும் மீதமிருக்கும்
கேள்விகளைக் கேலி செய்தபடி..

டிஸ்கி: ஜூன் 15-30 அன்று வெளியான இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது.

Wednesday, June 27, 2012

தீராத விளையாட்டுப்பிள்ளை..


இணையத்தில் பிடித்து வந்த காற்று..
சிறைப்படும்
ஒவ்வொரு தருணங்களிலும்
குதித்துக் கூத்தாடுகிறது காற்று
குழந்தைகள் கைகளில்
பலூன்களாய்..

ஊழிக்கூத்தாடியதும்
ஊரையே புரட்டிப்போட்டதும்
வேறெதுவோ என்று மறுதலித்து விட்டு
கட்டிச்சமர்த்தாய்ப்
புல்லாங்குழற்சிறுவன் பின்
ஆட்டுக்குட்டியென வந்த தென்றல்

பரிந்தூட்டும் தாயென
வியர்த்த முகங்கள் துடைத்தபின்
கலைத்து விளையாடுகிறது மேகங்களை
தீராத விளையாட்டுப்பிள்ளையாய்..

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

Wednesday, June 13, 2012

உருக்கொண்ட எண்ணங்கள்..

இணையத்தில் சுட்ட படம்..
தினம் வந்து கொண்டிருந்த
கனவுப்புலியொன்று
நனவில் வந்தது ஓர் நாளில்.

மூளைக்கனுப்பிய
நியூரான் சமிக்ஞைகள்
தொடர்பில் இல்லையென்று திரும்பி வந்து விட
திகைத்து மூச்சடைத்துத்
தடுமாறி நின்ற எனை நோக்கி
மெல்லக் கொட்டாவி விட்டபடி
திரும்பிப் படுத்துக் கொண்டது,
வாலசைவில்
தன் இருப்பைத் தெரிவித்தபடியே
தன் கட்டுக்குள் பிறரை வைக்க
நன்றாகக் கற்றிருந்த அந்தப்புலி.

எங்கணும் எதிலும் வாலின் நாட்டியத்தரிசனமளித்தும்
அற்ற பொழுதுகளில்
கூர் பல்லால் ஆசீர்வதித்தும்
என் பொழுதுகளை ஆக்கிரமித்திருந்த ஓர் போதில்
பயம் கொன்று திரும்பி
அதன் கண்களைச் சந்தித்தேன்.
பிரபஞ்சப் பேரொளி சுடர் விட்ட அதன் கண்களில்
கருணையின் தரிசனமும் தாண்டவமாட
சுருங்கிய கோடுகள் புள்ளிகளாயின.

உண்மையுரு எதுவென்று மயங்கி நின்ற
என்னிடம்,
‘உன் எண்ணங்கள் கொள்ளும் வடிவம்தானடி சகியே நான்,
திண்ணமாய் எதிர் கொள் மலைக்காமல்,
புலியோ,.. புள்ளிமானோ எதுவுமே நீ வளர்ப்பதுதான்’ என்றுரைத்து,
இளந்துளிர்க் கொம்புகளை
மெல்லக்குலுக்கியபடி
அசை போட ஆரம்பித்தது எண்ணப்புற்களை..


டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.