Pages

Wednesday, January 30, 2013

ரயிலோடும் வீதிகள்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)

(இணையத்தில் சுட்ட படம்)
கயிற்று வளையத்துள்
அடைபட்டிருந்த பெட்டிகளெல்லாம்
அலுத்துக்கொண்டனர்,
ரயில் மெதுவாகச்செல்வதாக..
குதித்துக் கும்மாளமிட்டுச்
சூறாவளியாய்க் கிளம்பிய ரயில் பெட்டிகள்
ஒன்றுக்கொன்று இடித்துத் தள்ளியதில்
தடம்புரண்டோடிய
உற்சாக ஊற்று
சற்றுச்சுணங்கிற்று அவ்வப்போது.
பிள்ளையார் கோவில் நிறுத்தம்
இந்நேரம்
தாண்டப்பட்டிருக்க வேண்டுமென்ற
மூன்றாவது பெட்டி காளியப்பனை
ஆமோதித்தாள்
ஐந்தாவது பெட்டியான வேலம்மாள்.
“வெரசாத்தான் போயேண்டா”
விரட்டிய குரலுக்குத்தெரியாது,
ரயிலோட்டுனருக்கு
அன்றுதான்
காலில் கருவை முள் தைத்ததென்பது.
அலுத்துப்போன கடைசிப்பெட்டி
சட்டென்று திரும்பிக்கொண்டு இஞ்சினாகியதில்
வேகம் பிடித்த ரயிலில்
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது
முன்னாள் இஞ்சின்
வலியில் அலறிக்கொண்டு..

டிஸ்கி: வெளியிட்ட நவீன விருட்சத்திற்கு நன்றி.

3 comments:

rishi said...

அட... என் சின்ன வயது ஞாபகங்களைக் கிளறிவிட்டது இந்தக் கவிதை. எங்கள் ரயில் பெட்டியிலெல்லாம் நாங்கள் பெண்பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளமாட்டோம். ஏனெனில் எங்கள் ரயில் பயணம் அக்கர்ண ஊர்ணி, பெரிய ஊர்ணி, புலிப்பாறை என நீண்ட பயணமாகும். சனி ஞாயிறுகளில் காலையில் ஆரம்பித்தால் பசிக்கும்வரை நீளும். சில இடங்களில் மரத்தின் கீழ் நின்று வகுப்பறை அரசியல் ஊர் வம்பு என நீளும். ம்ம்ம்...பசுமையான நாட்கள் அவை !

ராமலக்ஷ்மி said...

மலர்ந்தன எனக்கும் நினைவுகள்:)!

இரயில் பெட்டியாகவும், இஞ்சினாகவும் இருந்திருக்கிறேன். கடைசிப்பெட்டிக் குறும்பை அண்ணன்கள் அடிக்கடி செய்து எங்களை அழவிடுவார்கள்:)!

பால கணேஷ் said...

மறக்க இயலாத மாணவப்பருவ வாழ்வை திரும்பிப் பார்க்க வைத்தது கவிதை. நான் இஞ்சினாக ஒருபோதும் இருந்ததில்‌லை. பருமன் காரணமாக அகலமான இந்தப் பெட்டி ரயிலின் மத்தியில்தான் இணைக்கப்படும். ஹா... ஹா...