கொக்கு பற பற
கிளி பற பற
விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்
நல்லாச்சியும் பேத்தியும்
இறகும் சிறகுமுள்ளவையெல்லாம் பறக்கும்
அதே நேரத்தில்
நாலு காலுள்ளவையும்
இரு கால் பிராணிகளும் கூட பறக்கின்றன
சந்தடி சாக்கில்
விடை பிழைத்தவர்
வென்றவர் சொல் பணியவேண்டுமென்பது
விளையாட்டின் விதி
வெற்றிகளை
ஒவ்வொன்றாய்ச்சேர்த்து வைத்து
மொத்தமாகவும் அனுபவித்துக்கொள்ளலாமென
திருத்தம் கொணர்கிறாள் பேத்தி
உடன்படுகிறாள் நல்லாச்சி
ஏறுபுள்ளிகளும் இறங்குபுள்ளிகளுமாய்
இருவரின் கணக்கிலும்
ஏய்க்க முடியாத
வரவு செலவு எக்கச்சக்கம்
அதில்
நல்லாச்சி ரகசியமாய் விட்டுக்கொடுத்ததெல்லாம்
கள்ளக்கணக்கு
பறக்கும் குதிரையையெல்லாம் கண்டிருப்பதாக
பேத்தி அடித்துச்சொல்லும்போது
என்னதான் செய்வாள் ஆச்சி
பறக்கும் தட்டை
ஒரு முறை அடுக்களையில் கண்டதாக
அவள் சொன்னபோது மட்டும்
தலையைகுனிந்து கொண்டார் அப்பா
பேத்திகளின் உலகில்
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும்
இறக்கைகள் முளைத்திருக்கின்றனவே
கைகளை அசைத்தால்
நல்லாச்சி கூட பறக்க முடியுமென்று
அவள் ஆணித்தரமாய்ச்சொல்கையில்
நல்லாச்சியே நம்பி விட்டாள் ஒரு கணம்
நன்றாய்த்தானிருந்தது அக்கற்பனை
இறக்கைகளிருந்தால் சாத்தியமாகுபவற்றையெல்லாம்
வர்ணித்து வர்ணித்து விரியச்செய்து
எங்கெங்கோ பறந்து கொண்டிருக்கின்றனர்
நல்லாச்சியும் பேத்தியும்
விளையாட்டு கிடக்கிறது ஒரு மூலையில்.
டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.