Pages

Sunday, August 9, 2026

முகவரிகளின் வாசனை.


வளைந்து தொங்கும் நிலாவின் விளிம்பில்
மிதக்கும் என் பாதங்கள்
நிகழ்காலத்தின் காலணிகளை அணியும்போது
காற்றோடு கரைந்துபோகிறது
என் ஆதி முகவரிகளின் வாசனை

ஒவ்வொரு வாசலையும் கடக்கும் நேரம்
காலம் தோல் உரித்துக் கொள்ளும்போது
உதிர்ந்து விழும் என் நிழல்கள்
யாரோ விட்டுச்சென்ற நிழற்படத்தை
தன் முகம் என நம்ப முயல்கின்றன

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை
மெல்லத் திருடிக் கொண்டு
முட்களைச் சொருகி வைக்கும்
விசித்திர வேடத்திற்கு
பக்குவமென்றும் அனுபவமென்றும் பெயரிட்டு
நிறுவுந்தோறும்
இருண்ட வானில்
தன் பழைய கூட்டைத் தேடி அலையும்
ஒரு இறக்கையற்ற பறவையாய்
மிதந்து கொண்டிருக்கும்
என் குழந்தைப்பருவச் சிரிப்புடன்
யாருமற்ற வீதியில்
தன் சொந்தக் குரலையே தொலைத்துவிட்டு
தேடிக்கொண்டிருக்கிறது ஒரு வெற்று எதிரொலி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, August 8, 2026

நல்லாச்சி


நல்லாச்சி உறங்குகிறாள்
சமையலறைப் பாத்திரங்கள் ஓசையின்றி 
சைகையில் பேசிக்கொண்டிருக்க
தாழ்வாரம் வரை வந்து 
தயங்கி தவிப்போடு அமர்ந்திருக்கும்
வெயிலின் தங்க நிறம்
படிகளில் தேன்துளிகளாய்த் தேங்குகிறது

பகலெல்லாம் ஓயாமல் உழைத்த களைப்பில் 
பாயில் சாய்ந்திருக்கிறாள் நல்லாச்சி
இறகுகளை மெல்ல விரித்த தென்றல்
இதமாய் விசிறுகிறது அவளுக்கு
காற்றில் கலைந்த நிழல்கள்
பூனைக்குட்டியாய் அவள் காலடியில் முடங்கியிருக்க
முற்றத்தில் விளையாடும் பேத்தி
எட்டிப்பார்த்துக்கொள்கிறாள் அவ்வப்போது
அவளுக்கான கதைகள்தான்
இப்போது
நல்லாச்சியின் கனவுகளில் கருக்கொண்டிருக்கின்றன

அகில உலகமும் தன் இயக்கம் மறந்து நிற்க
காலமும் வெயிலும் வாசற்படியில் தவம் கிடக்கின்றன
சூரியனின் கதிர்களை அணைத்துக்கொண்டு
நல்லாச்சி உறங்குகிறாள்
பேத்தியும் காத்துக்கொண்டிருக்கிறாள்
அண்ணன் மீதான பஞ்சாயத்துக்கும்
கதைகளுக்குமாக

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, July 26, 2026

ஆகச்சிறந்த சுயநலமி..


இருளின் நஞ்சை விழுங்கி
அமுதச் சுடரினைப் பொழியும்
மௌன மரங்களின் கனவுலகில்
சஞ்சரிக்கும் மேகங்கள்
பூக்களின் புன்னகையை உதிர்க்கின்றன.

தன் காயங்களை மறைத்து
பிரபஞ்சத்தை ஒளிரச்செய்யும்
தேவதையின் வெண்ணிறச் சிறகுகளை
இருட்டறையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது
ஒரு பேராசைக்காரனின் நிழல்.

சுரக்கும் அமுதக்கலசத்தை உடைத்து
அதில் தன் இருட்டைக் கலந்து
தன்னை வாழவைத்த பேரன்பின் கழுத்தை
மென்மையாக அறுத்துப் பலியிடுகிறான்
மண்ணின் ஆகச்சிறந்த சுயநலமியாம் மனிதன்
செய்வதறியாமல் வேடிக்கை பார்க்கிறார் கடவுள்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Sunday, July 19, 2026

நல்லாச்சி..


கிளை நுனியில் ஊசலாடும்
தூக்கணாங்குருவியின் பெருவீடு கண்டு
வியப்புடன் வினவினாள் பேத்தி
“கம்பியும் இல்லை, காரையும் இல்லை,
எப்படி முடைந்தது இத்தகு பேரழகை?
பட்டம் பயின்ற பொறியாளராலும்
இப்படியோர் விந்தை இயலுமோ ?”

மென்னகை புரிந்த நல்லாச்சி
இயற்கையின் அதிசயங்களில்
இதுவுமொன்று என்றாள்;
கூட்டுக்குள் மழைத்தூறல் நனைக்குமே
இரவானால் வெளிச்சத்திற்கு என்செய்யும்
அசராமல் கேள்விகளை அடுக்குகிறாள் பேத்தி

‘புல்லின் பின்னல் மழையைத்தடுக்கும்
மின்மினிகள் பதித்த சேற்றுருண்டை விளக்காம்’
நல்லாச்சியின் விளக்கத்தில் மகிழ்ந்து
“எனக்கும் தருவாயோ இப்படியொரு கூடு
என் பொம்மைகள் குடியிருக்க?”
ஆசையாய் அணைத்துக் கேட்கிறாள் பேத்தி
குப்பையின்றி உன் கூட்டைச் சுத்தப்படுத்து
வெகுமதியாய்க்கிடைக்கும் குருவிக்கூடு
நெற்றியில் வருடும் விரல்களில்
வழிகிறது அன்பின் மொழி
ஆமோதிக்கின்றன குருவிகளெல்லாம்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Wednesday, July 15, 2026

வண்ணத்துப்பூச்சிகளின் பிரபஞ்சம்..


காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்ற 
விதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தை
வாசித்தறியா பூக்கள்
ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன

காற்றின் கத்தரிக்கோலால்
உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டு
மண்ணின் ஆழத்தில் புதையப்போகும்
மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டு
தங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன

யாரோ வரைந்த ஓவியத்திலிருந்து
திடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்
உலகைப் பார்க்கும்
அவற்றின் பார்வையில்
வானம் ஒரு நீலநிற நதியாகவும்,
பூமி அதில் மிதக்கும் கனவாகவும் மாறுகிறது

விதியின் காலணிகள்
காத்திருக்கும் பாதையெங்கும்
தன் பாட்டிற்கு இசைத்துக்கொண்டு
பிரபஞ்சத்தின் காதுகளில்
மௌனமான ரகசியங்களை கிசுகிசுக்கின்றன
அச்சமற்ற ஒரு அழகின் திமிரோடு.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Monday, July 6, 2026

நல்லாச்சி


மழை பொய்த்த அவ்வருடம்
அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்
கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்
வெடித்து அழுகிறது நிலம்
மழைக்கஞ்சியை உண்டுவிட்டு 
மௌனம் சாதிக்கும் கடவுளர்முன்
இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம்

அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிட
அடாபுடாவென வந்திறங்குகிறது இடி
நல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்
கருகிய வாழைமரத்தூரில்
தங்கமாய் உறைந்திருக்குமென்று
பொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம்

அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்
அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணை
கிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான் 
ஆறடி ஆழத்துக்கு
பொங்கிவந்த ஊற்றொன்று வானத்தையெட்டுகிறது
இதுதான் தங்கமெனச்சுட்டுகிறாள் நல்லாச்சி
உயிர் வளர்க்கும் அமுதத்தை
ஊருக்காய் நேர்ந்து விடுகிறாள்
எண்ணியெண்ணி வாழ்த்துகின்றனர் தலைமுறைக்கும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, June 28, 2026

ஒரு துளியின் துளிர்ப்பு..


சாம்பல் படர்ந்த இதயங்களின் மேல்
மழைத்துளிகள்
ராகம் பாடிச் செல்கின்றன
சுட்டெரித்த சொற்களின் வடுக்களைக் கழுவி
மனதுக்குள் புதைந்திருந்த மௌனத்தை
பாட வைக்கிறது அந்தப் பெருமழை.

சொற்களால் வீழ்த்தப்படும் மனிதர்களை
இயற்கை ஒருபோதும் கைவிடுவதில்லை
கனிவுடன்
அமுதம் பொழிந்து உயிர்ப்பிக்கிறது
பேரழிவுக்குப் பின் நிகழும்
பேரன்பின் துளிர்ப்பு அது

சுட்டெரித்த எதிர்ப்புகளையெல்லாம் உரமாக்கி
அவநம்பிக்கையின் வேர்களை அறுத்தெறிந்து
மன்னித்தலின் பெருவழியில்
புன்னகையோடு பயணிக்கும் அந்த உயிருக்கு
ஒரு துளி அன்பு போதும்
அதை
யுகாந்த காலம் வரை வாழவைக்க.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, June 20, 2026

நல்லாச்சி


சந்தைவிலை சரியாய் அமையவில்லையாம்
கொட்டி வீசப்பட்டிருக்கின்றன காய்கனிகள்
கூடைகூடையாய் சாலையோரத்தில்
எதிர்ப்புமுகம் காட்டும்விதமாய்
கண்டு பதைபதைக்கிறாள்
விவசாயியும் தாயுமான நல்லாச்சி
ஊனுறக்கம் மறந்து அல்லும்பகலும் காத்ததெல்லாம்
பயிர்வாடத் தான் வாடி நின்றதெலாம்
அழிய விடுவதற்காகவோவெனக் குமுறுகிறாள்

ஆதரவற்றோர்க்கு அளி
அதிக லாபமின்றி அள்ளிக்கொடு
அல்லது
விளைந்ததின் மதிப்பை விவேகமாய்க்கூட்டு
விழுந்த விலைக்காய் நீயும் சோர்ந்தால்
உழைத்த நிலத்தின் உதிரம் வற்றாதோ
பக்குவம் செய்த மாங்காயை 
சாடியின் இருட்டுள் தவம் செய்ய வை
தக்காளியை அழலேற்றிப் பதனிடு
விளைவித்த நீயே விலையதிகாரியாவாய்
நிலத்தின் அறத்தையும் காப்பாயாக

அதுகாறும் அழுதவன் யோசிக்கிறான்
எந்நிலையிலும் கைவிடா பூமியை
தானும் கைவிடலாகாதெனத் தெளிகிறான்
மாற்றுவழி ஆயிரம் பிழைப்பிற்காய் இருக்க
காற்றைப்போல் அலைபாய்தல்
தகுமோவென எண்ணுகிறான்
பலனடையும் நடுவர்களை விலக்கி
அறுவடை நேரே அடுப்புக்குச்செல்ல
பாதை சமைக்க ஆரம்பிக்கிறான்
பயணம் இனி இனிதாய் அமையட்டும்..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, June 6, 2026

நல்லாச்சி


பாகப்பிரிவினை வேண்டி
சண்டித்தனம் பண்ணுகிறார் சின்னத்தாத்தா
எல்லாம் பகிர்ந்து முடித்தபின்
தோட்டத்திலிருக்கும் மாமரத்திற்காக
வந்து நிற்கிறது பஞ்சாயத்து

அடிபெருத்த மாமரம் மரப்பலகைக்காகுமென
அடிபோட்டுக்கொண்டிருக்கிறார் சின்னத்தாத்தா
காய்ப்பு முடிந்த முதியமரம்
கட்டில்செய்ய ஆகுமென்பது அவர் வாதம்
வாடாத பசுமரம் வாசமுள்ள பால்மரம்
கிளை கழித்தால் தளிர்க்கும் 
முதிர்ந்தாலென்ன மூலையில் வாழட்டுமென
பெரியவர் கண்கசிகிறார்
இராத்தூக்கமென்பது இனி இராதென்பதுபோல்
கண்மூடிக் குமைகிறார்

பேத்தியின் ஆலோசனைப்படி தெளிகிறார்
அடிமரம் உனக்கு கிளையெலாம் எனக்கு
பிரி பாகத்தை என இறங்கிவருகிறார்
ஆனாலொன்று.. 
என் பாகத்தைச் சேதப்படுத்தாமல்
உன் பாகத்தை எடுத்துக்கொள் என்கிறார்
அடிமரமின்றி நுனிமரம் எங்ஙனம் பிழைக்கும்
குழம்புகின்றனர் கோள்மூட்டிய குறுக்குபுத்தியோர்
குறுஞ்சிரிப்புடன் நகர்கின்றனர் சான்றோர்
தங்கள் பாகத்துக்கிளையில்
பேத்திக்கு ஊஞ்சல் கட்டுகிறாள் நல்லாச்சி
புன்னகையுடன் உதவுகிறார் தாத்தா
சின்னத்தாத்தாவின் புகைச்சலை ரசித்தவாறே.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் இதழுக்கு நன்றி.

Saturday, May 23, 2026

நல்லாச்சி..

பெரியதாத்தா வரும் தினங்களில்
இறக்கை கட்டிக் குதூகலிப்பாள் பேத்தி
வயலில் விளைந்தவையென கொண்டுவரும் மூட்டைக்குள்
தோட்டத்தில் உதிர்ந்தவையென 
ஒன்றிரண்டு மயிற்பீலிகளும் இருப்பதுவும்
ஒரு காரணம்

ஆடலும்பாடலும் கதைசொல்லலுமாய்
தாத்தாவின் தோளில் நிழலாய்த்தொற்றி
நல்லாச்சியை மறந்து திரியும் பேத்திக்கு
ஒரேயொரு குறைதான்
தன் களித்தோழனிடம்
கைவிரலிடுக்கில் புகையும் கடைசி விரல்தான் அது
ஆருரைத்தும் கேட்காத அகந்தையை
அறிவுறுத்தி உடைக்க எண்ணுகிறாள் அவள்

தாத்தா புகைத்த துண்டுகளை 
பொறுக்கிச் சேர்த்த பேத்தி
மூட்டையாய்க் கட்டுகிறாள் மயிற்பீலிகளுடன்
‘இனி இவையே எம்துணை
நீங்களில்லா வெற்றிடத்தை 
இது சற்றேனும் இட்டு நிரப்பட்டும்’
மழலையில் சொன்னவளின் மதிமுகத்தில்
பயத்தின் ஈரம் பரவ
நெஞ்சுக்குழி துடிக்கிறது தாத்தாவுக்கு
இனி அதைத்தீண்டேன் எனச்சூளுரைக்கிறார்
இனியது என மகிழ்கின்றனர் அனைவரும்
ஆலமரத்தையே சாய்க்கும் ஆனை
அங்குசத்துக்கு அடங்குவது வழமைதானே.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, May 9, 2026

நல்லாச்சி

செல்லப்பிராணி வளர்க்க ஆசை பேத்திக்கு
வீட்டிலுள்ளோரைப் பிய்த்துப்பிடுங்குகிறாள்
சேக்காளிகள் வீடுகளிலெல்லாம் வளர்க்கின்றனராம்
கதைகதையாய்ச் சொல்கின்றனராம் அருமைபெருமைகளை
சொல்லிச்சொல்லி மாய்கிறாள்
தனக்குமொன்று இல்லையெனில் மதிப்பில்லையென்கிறாள்

நடைபழக நாயோ பூனையோ
சேர்ந்து மிழற்ற கிளியோ குருவிக்குஞ்சோ
சொப்புவாய் குவித்துக்கொஞ்சும் மீன்களோ
எனக்கொரு செல்லம் வேண்டுமென்கிறாள் 
பராமரிப்பை அஞ்சுகின்றனர் வீட்டார்
பிள்ளைப்பாசம் நிறைவேற்றச்சொல்கிறது
இயலாமை பின்னடைய வைக்கிறது

அன்றோர் தினம் கீச்வீச்சென விடிகிறது
கண்திறக்காத பஞ்சுப்பொதிகளுடன் தோட்டத்தில்
அள்ளி மடியிலிடுகிறாள் நல்லாச்சி
அணைத்துக்கொஞ்சுகிறாள் பேத்தி
இன்னொரு அன்னையாய் மாறி
இப்போதெல்லாம் 
தத்தம் பிள்ளைகளை அவளிடம் விட்டுவிட்டு
உலாச்சென்று விடுகின்றன அத்தனை ஜீவன்களும்
தலையிலும் தோளிலும் இடுப்பிலுமாக
அத்தனையும் சுமந்து நடைபழகுகின்றாள் பேத்தி
ஒரு பேரன்னையாக.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

நல்லாச்சி


செல்லாச்சி வீட்டில் அமளியாயிருக்கிறதென
ஓடுகின்றனர் நல்லாச்சியும் பேத்தியும்
பிடிவாதம் கொண்ட பேரப்பிள்ளைகளால்
இடிந்து அமர்ந்திருக்கிறது குடும்பம்
அவர்கள் உதிர்த்த
தகாத வார்த்தைகளும் தற்கொலை அச்சுறுத்தல்களும்
இறைந்து கிடக்கின்றன வீடெங்கும்
வாசலில் வழியும் ஒன்றிரண்டு வார்த்தைகளால்
எட்டிப்பார்க்கும் வம்பர்களும் அன்பர்களும்
இன்னும் குறுக வைக்கின்றனர் அக்குடும்பத்தை
பெற்றோரும் அவர்களைப் பெற்றோரும்
ஒருவர்மேல் ஒருவர் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்
செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாய்
இருவர் கூற்றிலும்
முழுக்க மெய்யுமில்லை முழுக்கப் பொய்யுமில்லை

எங்கே உருகவேண்டும் எதற்கு இறுகவேண்டுமென
எல்லை வகுக்காததன் விளைவே இது
என்கிறாள் நல்லாச்சி
குறைநீரில் பூஞ்செடி வாடாதா என்கிறது அக்குடும்பம்
அதிகநீர் அழுகவைக்கும் என்கிறாள் நல்லாச்சி
அவசியமெனில் செடியைச் சற்று நறுக்கவும் செய்யலாம்
சிறு கண்டிப்பு அவசியமே
மென்மை எதிர்பார்த்து பூஞ்சையாய் விளையக்கூடாது
கல்வியும் ஒழுக்கமும் இருகண்கள்
ஒன்றைப்போற்ற இன்னொன்றைத் தூற்றவேண்டா
பெரியோர் சிறியோர் பரஸ்பர மதித்தலில்
கிளைவிட்டுப் பொலியும் அன்புமலர்கள்
பின்னேர் சரிவரத் தொடர 
முன்னேர் தடுமாறாமல் செல்லல் வேண்டும்
அத்தனையும் கேட்டுக்கொள்கிறது அக்குடும்பம்
பூனைக்கு மணிகட்டியிருக்கிறாள் நல்லாச்சி
உரைத்தவையெல்லாம் உரமோ
விழலுக்கிறைத்த நீரோ யாரேயறிவார்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

நல்லாச்சி

                                           

நடைப்பயிற்சி வேண்டுமாம் நல்லாச்சிக்கு
அறிவுறுத்தி விட்டார் மருத்துவர்
நீரிழிவின் ஆரம்பப் படிநிலை
சற்றே தடதடக்கும் இதயம்
பலவீனமாகிறேனென மணியடித்துவிட்ட எலும்புகள்
இறுக ஆரம்பித்திருக்கும் மூட்டுகள்
என உண்டியல் காசைப்போல் சேமித்திருக்கும்
உடல் நலிவை ஆற்றும்
மென் நடையும் மென் பயிற்சியும்
தன்னால் ஆகாதென்கிறாள்
டாக்டரின் படிப்பையே சந்தேகிக்கிறாள்

சாக்குப்போக்குச் சொல்லியும்
மெய்யே போல் பொய்க்கோபம் கொண்டும்
எல்லாவற்றையும் ஒதுக்குகிறாள்
வீட்டுக்குள் நடப்பது கணக்கில்லையா என்கிறாள்
கலகலத்துக்கிடக்கிறது வீடு
களேபரமான ஓர் நாளில்
இடைவெளியற்று இருமிய பேத்தி
தளர்ந்து சரிகிறாள் எல்லோரும் பதற

ஒருமண்டலமாய் விடியலில்
ஓயாது பிரகாரம் சுற்றுகிறாள் நல்லாச்சி 
அடிப்பிரதட்சணமென்ன நெய்விளக்கென்ன
அங்கப்பிரதட்சணமென்ன எள்விளக்கென்ன
என்னென்ன விரதமென்ன எல்லாவும் 
ஏற்கிறாள் பேத்திக்கென
பொய்நோய்க்காய் பெற்றோரிடம் மன்னிப்பு வேண்டியபின்
கோவிலிலிருக்கும் அம்மையப்பனிடமும் வேண்டுகிறாள் பேத்தி
தினம் நூறு தோப்புக்கரணங்களுடன்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.



நல்லாச்சி

                                   
தோல்பாவைக்கூத்து தெருக்கூத்து
இரண்டும் வந்திருக்கின்றன கிராமத்திற்கு
ஊர்த்திருவிழாவை முன்னிட்டு
தெய்வங்களும் கொஞ்சம் 
உற்சாகமடைந்து புத்துணர்வு கொள்கின்றன

நல்லாச்சியும் பேத்தியும்
தினம் ரசிக்கின்றனர் இரு கூத்துகளையும்
அர்ச்சுனன் தபசையும், நள தமயந்தியையும்
அரிச்சந்திரனையும் பாஞ்சாலி சபதத்தையும்
நல்லாச்சி சொன்ன இன்னபிற கதைகளையும்
கூத்துவடிவில் பார்த்த பேத்தி
ராஜாக்களையும் ராணிகளையும்
பளபளக்கும் அரசவாழ்வையும்
நிஜமெனவே நம்பத்தொடங்குகிறாள்
இரவிலும் பகலிலும் வெவ்வேறாய்ச் சுழல்வது
அவர்கள் உலகம் என்பதை மறுக்கிறாள்

ஒரு பகலில் கல்லடுப்பில் சமைத்தபின்
அம்மிதேடி வருகிறாள் மகாராஜாவின் மனைவி
நல்லாச்சி வீட்டுக்கு
கைச்சொடுக்கில் அடிபணியும் ஏவல்பெண்கள்
கொண்ட ராணி
ஒட்டிய கன்னங்களுடன்
அள்ளிச்சொருகிய புடவையும் கூந்தலுமாய்
நெஞ்சுவலிக்க அம்மியரைப்பதை
அதிர்ச்சி விலகாமல் பார்க்கிறாள் பேத்தி

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.


Monday, April 6, 2026

நல்லாச்சி


வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியை
வருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்
மழையும் குளிரும் வெயிலும்
அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லி
அந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’
ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவை
பாவம்போல்
குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்
தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள்

முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகு
சாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்
குலைகுலையாய் நுங்கும் இளநீரும்
கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்
ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்
குட்டிச் சிப்பாய் பேத்தியுடன்

அவ்வூரைக் கடக்குமட்டும்
மேகத்தில் முகம் மறைக்கும்
நல்லாச்சிக்குப்பயந்த சூரியன்
ஆச்சிக்காய் கொணர்ந்த பனிப்பாறை
உருகிச் சிதற
படபடவெனப் பெய்கிறது ஆலங்கட்டி மழை
‘நாசமத்த மழை, என் செடியெல்லாம் போச்சே’
இன்னும் திட்டுகிறாள் நல்லாச்சி
வெறுத்துப்போன சூரியன்
பால்வெளிக்கப்பால்
சன்யாசியாய்ப் போய்விட்டதாய்க் கேள்வி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, March 30, 2026

நல்லாச்சி


இருளென்றால் பயப்படும் பேத்திக்கு
இரவும் ஆகாது
மூன்றுகண்ணன் வசிப்பதாய்
முற்றத்திற்கும் செல்ல மாட்டாள்
இரவின் நிறத்தைப் பூசியதால்
கருமையும் ஒவ்வாததாயிற்று

ஒரு எள்ளுருண்டையைப்போல்
திரண்டிருக்கும் கன்றுக்குட்டிக்கோ
அவளென்றால் தனிப்பிரியம்
ஒதுக்கினாலும் விரட்டினாலும்
அகலாது பிரியஞ்சொரியும்

பேத்தியைத் தெளிவிக்க
இட்டுச்சென்ற நல்லாச்சி
பலவும் சொல்லிப் போதிக்கிறாள்
பிஞ்சு மனதைப் பக்குவப்படுத்துகிறாள்
இரவின் கருமைக்குள்தான் நட்சத்திரங்கள்
தம் முகவரியைத் தேடிக்கொள்கின்றன
வெளிச்சம் ஓர் பிம்பம் எனில்
இருள் ஓர் நிஜம்
வெயில் குடித்துக் களைத்த பூமியின்
போர்வையே இருள்
இத்தனை அஞ்சும் நீ
கண்துஞ்சும்போது
உன்னுள் அமைதியாய் உறைந்திருப்பவும்
காரிருளே
இருளை அஞ்சுவாயெனில்
அது
உன்னையே நீ அஞ்சுவதாம்
யோசிக்க ஆரம்பிக்கிறாள் பேத்தி
ஊர ஆரம்பித்திருக்கிறது எறும்பு
கல் தேய்ந்துவிடும் விரைவில்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, March 23, 2026

நல்லாச்சி


நல்லாச்சியிடம் கதையளக்கிறாள் பேத்தி
கண்டபடி பறக்கிறது கற்பனைக்குதிரை
கதை சொல்வதும் அளப்பதும்
ஆச்சிகளின் வழக்கம்
இங்கு இன்று
அது பேத்தியின் முறை

நல்லாச்சியின் முதல் விமானப்பயணம்
குதூகலம் பாதி
கலவரம் பாதியென இருப்பவளிடம்தான்
கண்ணகல உரைக்கிறாள் பேத்தி
மேகங்களின் மேல் ஓய்வெடுக்கும் நிலவை
வன்னமிகு இந்திரலோகத்தை
மேலோகம் சென்ற மூதாதையரை
கண்குளிரக் காணலாமென்கிறாள்
அறிவுக்கும் சந்தேகத்துக்குமிடையே
ஊசலாடுகிறது நல்லாச்சி உள்ளம்

உயரப்பறந்த வானூர்தி
மேகங்களின்மேல் மிதக்கிறது
நல்லாச்சியின் பார்வையும்
தொடுதூரம் வரை தொட்டுத்திரும்புகிறது
அங்குமிங்குமாய்த் தேடுகிறது
விசாரித்த பேத்தியிடம் சொல்கிறாள்
‘எங்க அப்பாவைத் தேடுகேன்’
வார்த்தை வராத பேத்தி
நல்லாச்சியுடன் கைகோர்க்கிறாள் ஆதுரமாய்

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, March 16, 2026

நல்லாச்சி


நாளும் நாலு நல்லதை
நடைப்பயிற்சியின்போது அலசுவது
நல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்
தகவல்கள் பரிமாறுவதுபோலவே
அறிவுரைகளும் பரிமாறப்படும்
பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி

வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்
அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்
நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரை
பிழிந்து அலசியபின்
பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்று
மனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென

அகந்தையும் தன்முனைப்பும்
பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்
காரணங்களென்கிறாள் நல்லாச்சி
துளிக்குள் பிறந்தழியும்
மாந்தர் அறியாரோ
துளிக்குள் துளியே தாமென்று
அகந்தை அமர்ந்த அறிவும்
மதயானை புகுந்த மல்லித்தோட்டமும்
பிழைக்குமோ!! தழைக்குமோ!!
கேள்விகளின் பாதையில்
சென்றுகொண்டேயிருக்கிறாள் பேத்தி
நின்று கொண்டேயிருக்கிறாள் நல்லாச்சி
யுகயுகமாய்..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, March 1, 2026

தனிமையின் தண்மை


தூரத்து மலையில்
தனித்தலையும் ஒற்றைக்குருவி
மனிதவாசம் படா வெளியில்
ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூ
இன்னொரு ஒற்றைப்பாறைக்கு
தாவிச்செல்லும் வரையாடு
தன்னுள்மூழ்கித் தியானிக்கும்
அலையற்ற சிறுகுளம்
அவரவர் தனிமைக்கு
அவரவரே துணையாயிருக்க
பனித்துகள் திரட்டி
நிலாப்பொம்மை செய்கிறது மலை
ஒவ்வொருவரின் தனிமையையும்
கதகதப்பாய் அணைக்கிறது நிலா
குளிர்கிறது தனிமை.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, February 22, 2026

நல்லாச்சி


உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’
செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சி
நட்புகளுடன் விளையாடும் பேத்தியை
உச்சிப்பொழுதின் வெப்பம்
வாட்டுமென்ற அக்கறையில்
கலந்தாலோசித்த பட்டாளம்
திருவிழா விளையாட்டைத் தேர்கிறது
அறங்காவலராக்குகிறது நல்லாச்சியை

செங்கற்களே மூர்த்தங்களாய்
அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்
வடிவெடுக்கிறது சப்பரம்
பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்
நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்
காற்றில் ஒருவன் கொட்டுமுழக்க
தாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறது
ஏதும் கொணராத ஒருத்தியை
விலக்குகிறது கூட்டம்

பதைக்கிறாள் நல்லாச்சி
ஓதுகிறாள் பேத்தியின் காதில்
களிமண்ணில் வனைகிறார்கள்
அழகான ஸ்பீக்கர் செட்டை
உபயதாரராக்குகிறார்கள் விலக்கப்பட்டவளை
எட்டூருக்கு முழங்குகிறது இசை
கிளம்புகிறது புறப்பாடு
குதூகலிக்கிறார் இறைவன்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.